lundi 25 janvier 2010

உயிருக்கு போராடும் எஸ்.ஐ.-ஆம்புலன்சுக்கு காத்திருந்த மந்திரிகள்


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.


தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நன்றி அதிகாலை.காம்

0 commentaires:

Enregistrer un commentaire